Anti ISA
ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் மெழுகுவத்தி ஏந்திய பேரணியின்போது போலீசார் செய்த குளறுபடிகளுக்காக உள்துறை அமைச்சர் சைட் அமிட் அல்பார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்த துப்புரவான, நியாயமான தேர்தலுக்காக போராடும் கூட்டு அமைப்பான பெர்ச, இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சிலாங்கூர் போலீஸ் தலைவர் காலிட் அபு பக்கார், “குளறுபடிகளில் தமக்குள்ள பொறுப்பை ஏற்று பதவி விலக வேண்டும்”, என்று கேட்டுக்கொண்டது.
“அமைதியாக ஒன்றுகூடியிருந்த குடிமக்களைக் கலைப்பதற்கு போலீசார், வழக்கத்துக்கு மாறான முறையில் முயன்றது எங்களைத் திகைக்க வைக்கிறது.”
“வழக்கமாக, நடவடிக்கை எடுப்பதற்குமுன், கூட்டம் ஐந்து நிமிடத்தில் கலைய வேண்டும் என்று நடவடிக்கைக்குப் பொறுப்பான போலீஸ் அதிகாரி உத்தரவிடுவார்”, என்று அந்த அறிக்கை கூறியது. இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவ்வறிக்கை விநியோகிக்கப்பட்டது.
அக்கூட்டத்தில் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் தெரெசா கொக், பேரணியில் கலந்து கொண்ட சிவிலியன் ஒருவர் காயமடைந்த சம்பவத்தை விவரித்தார்.
“53 வயது நிரம்பிய டியான் அப்துல்லாவை சில போலீஸ்காரர்கள் பின்புறத்திலிருந்து தாக்கியுள்ளனர். இதனால் அவர் கீழே விழுந்ததில் தலையின் பின்பக்கத்தில் காயம்பட்டது. அதற்கு பல தையல்கள் போட வேண்டியதாயிற்று”, என்று அவர் சொன்னார். காயமடைந்தவரின் புகைப்படத்தையும் அவர் காண்பித்தார்.
இன்னொரு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சுல்கிப்ளி அகமட் (பாஸ்- கோலா சிலாங்கூர்), ‘போலீசின் முரட்டுத்தனத்தை எதிர்பார்க்கவில்லை என்றார். அதற்காக உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாரவர்.
“பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதுதான் போலீஸ் முரட்டுத்தனத்தின் நோக்கம் என்றால் அது எங்களின் போராட்ட உணர்வை எந்த வகையிலும் கலைக்கப்போவதில்லை”, என்றாரவர்.
ஜசெக தலைவர்கள்மீது “வன்முறையை” அனுமதித்ததற்காகவும் போலீஸ் தலைவரை அவர் சாடினார்.
அக்கூட்டத்தில் கலந்துகொண்ட வலைப்பதிவரான ஹரிஸ் இப்ராகிம், கடந்த நான்கு வாரங்களாக மெழுகுவத்தி ஏந்திய பேரணி நடைபெற்று வந்துள்ளது என்றார்.
இசா கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டு அந்தக் கொடிய சட்டம் நீக்கப்படும்வரை அது தொடரும் என்று அவர் சூளுரைத்தார்.
“சிலாங்கூர் மாநில அரசும் இதில் கலந்துகொண்டு அதன் கொள்கையை ஆதரிக்கும் மக்களைப்
பாதுகாக்க வேண்டும்”, என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற இன்னொரு செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜசெக தலைவர் லிம் கிட் சியாங், “வீடியோ சாட்சியம் இருக்கின்றபோதிலும் பொதுமக்களிடம் பொய்யுரைத்த” போலீஸ் தலைவரைச் சாடினார்.
நேற்று காலிட், நாட்டுப்பண் பாடிக்கொண்டிருந்த நேரத்தில் போலீசார் கூட்டத்தைக் கலைத்தனர் என்று சொல்லப்பட்டதை மறுத்தார். ஆனால் ஒரு வீடியோ பதிவு வேறு விதமாகக் காட்டியது.
“அவர் ஒரு அப்பட்டமான பொய்யர். கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார். நாட்டுப்பண் பாடிக்கொண்டிருந்தபோதுதான் போலீசார் கூட்டத்தைக் கலைத்துள்ளனர்”, என்று லிம் கூறினார்.
நாட்டில் “அடிப்படை பேச்சுரிமையை மீறியதற்கு” காலிட் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த மூத்த அரசியல்வாதி கூறினார்.
“பொய் சொன்னதற்கு பொதுமக்களிடம் உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்”, என்று லிம் கூறினார்.
அப்பேரணியில் 23 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களில் 22 பேர் மறுநாள் காலை விடுவிக்கப்பட்டனர். ஒரே ஒருவர் வேறு வழக்குகளின் தொடர்பில் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
